இந்தியாவின் முடிவைத் தீர்மானிக்கப் போகும் ஆப்கானிஸ்தான்… நியூசிலாந்துக்கு அப்செட் அளிக்குமா?

இந்தியாவின் முடிவைத் தீர்மானிக்கப் போகும் ஆப்கானிஸ்தான்… நியூசிலாந்துக்கு அப்செட் அளிக்குமா? 


நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக நியூசிலாந்து Vs ஆப்கானிஸ்தான் போட்டி இருக்கிறது. 



காரணம், இந்தியா! 


ஆம், இந்தப் போட்டியின் முடிவை பொறுத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும். நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இந்தப் போட்டியை வெல்லும்பட்சத்தில் இந்திய அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். ஆப்கானிஸ்தான் தோற்கும்பட்சத்தில் அந்த நொடியே இந்திய அணியும் இந்தத் தொடரை விட்டு வெளியேறியிருக்கும். அதிசயத்தை நிகழ்த்துமா ஆப்கன்? 


ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி பெரிய வித்தியாசத்தில் வென்றிருந்தது. டார்கெட்டை 6.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்திருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக அமைந்திருந்தது. இந்திய அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் வேறெந்த அணியை விடவும் இந்திய அணியின் நெட் ரன்ரேட் அதிகமாக இது மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை வென்றாலும் அரையிறுதிக்கு அந்த அணி தகுதிப்பெற முடியாமல் போவதற்கு இந்தியாவின் அதிகமான ரன்ரேட் காரணமாக இருக்கக்கூடும். மேலும், ஒருவேளை ஆப்கனின் ரன்ரேட் அதிகமாக இருந்தாலும் இந்தியாவிற்கு பெரிய சிக்கல் இருக்காது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளையே நமீபியா அணியை எதிர்கொள்கிறது. 


எனவே இந்த ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து போட்டியை பொறுத்து இந்திய அணிக்கு எவ்வளவு ரன்ரேட் தேவை? அதற்கு இந்திய அணி எத்தனை ஓவருக்குள் அல்லது எவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெல்ல வேண்டும் என்கிற கணக்கெல்லாம் இந்தியாவிற்கு இன்றே தெரிந்தே விடும். 


அதை டார்கெட்டாக ஃபிக்ஸ் செய்துவிட்டே நமீபியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கும். 


ஆனால், இந்தக் கணக்குகளை பற்றியெல்லாம் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் மட்டுமே யோசிக்க முடியும். நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்துவிட்டால் நமீபியாவிற்கு எதிராக ஆறுதல் ஆட்டம் ஆடிவிட்டு இந்தியா ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான். ஆப்கானிஸ்தான் நியூசிலாந்துக்கு அப்செட் அளிக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி. 


ஆப்கானிஸ்தானை முழுக்க ஒரு கத்துக்குட்டி அணி என ஒதுக்கிவிட முடியாது. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை மிகச்சிறப்பாகவே போட்டியளித்து வருகின்றனர். ஸ்காட்லாந்தை 60 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி வென்றிருக்கின்றனர். நமீபியாவை 98 ரன்களில் சுருட்டியிருக்கின்றனர். 


ஆப்கானிஸ்தான்இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கெதிரான போட்டியை எளிமையாக வென்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை போராடியே வெல்ல வேண்டியிருந்தது. 


கடைசியாக, இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டுமே பெரிய வித்தியாசத்தில் தோற்றிருந்தனர். ஆக, ஆப்கானிஸ்தானை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டுவிடவே முடியாது. 


மேலும், நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டருமே எப்போது வேண்டுமானாலும் மொத்தமாக சரிந்து விழலாம் என்கிற நிலைமையிலேயே இருக்கிறது. நமீபியாவிற்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்திருந்தது. 15 ஓவர்களில் 91 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதுவரை ஆட்டம் முழுவதும் நமீபியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் க்ளென் பிலிப்ஸ் மற்றும் ஜேம்ஸ் நீஷம் கூட்டணி அதிரடி காட்டி நியூசிலாந்தின் ஸ்கோரை 163 ஆக உயர்த்தியது. போட்டியையும் வென்றது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் கப்தில் 93 ரன்களை அடித்திருந்தார். அவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவே இல்லை. நமீபியாவும் ஸ்காட்லாந்தும் தங்களுக்குக் கிடைத்த மொமண்டத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் நியூசிலாந்தை அவர்களே அசைத்து பார்த்திருப்பார்கள். பந்துவீச்சுதான் ஆப்கனின் பலமே என்பதால் அவர்கள் நியூசிலாந்தை நிச்சயமாக தடுமாற செய்ய வாய்ப்பிருக்கிறது. 

ஸ்பின்தான் ஆப்கானிஸ்தான் அணியின் பிரதான ஆயுதம்.


ரஷீத்கான் ரஷீத்கானும் முஜிபிர் ரஹ்மானும் இணைந்து வீசும் அந்த 8 ஓவர்களை சமாளிக்க நியூசிலாந்து திணறக்கூடும். ஆனால், முஜிபுர் ரஹ்மான் காயம் காரணமாகக் கடந்த இரண்டு போட்டிகளிலும் ஆடவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் அணி 


இந்தப் போட்டியில் ஆப்கனுக்காக இல்லாவிடிலும் இந்தியாவிற்காக அவர் ஆடியே ஆக வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை வெல்ல முடியுமாயின் அவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மூலம் மட்டுமே அது சாத்தியம். பேட்டிங்கில் ரன்கள் எடுக்க ஆட்கள் இருந்தாலும் நின்று சரியாகத் திட்டமிட்டு ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கும் பலம் ஆப்கானிஸ்தானிடம் இல்லை. மேலும், நியூசிலாந்தின் பந்துவீச்சும் வெறித்தனமாக இருக்கிறது. போல்ட், சவுத்தி, மில்னே, சோதி, சாண்ட்னர் என சுழல்-வேகம் இரண்டிலும் மிரட்டக்கூடிய லைன் அப்பை வைத்திருக்கிறார்கள். ஆப்கன் கொஞ்சம் சறுக்கினாலும் மொத்தமாக சுருட்டிவிடுவார்கள். 


சொல்லப்போனால், இரண்டு அணிகளுமே தங்களின் பந்துவீச்சை நம்பியே களமிறங்குகின்றன. இந்திய ஆதரவு மனநிலையோடு ஆப்கானிஸ்தான் மீது அதீத நம்பிக்கை வைப்பது நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். அதேநேரத்தில், ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் ஒரு பெரிய அணியை ஒரு கத்துக்குட்டி அணி சம்பவம் செய்து அப்செட்டை நிகழ்த்தும். இந்த உலகக்கோப்பையில் இதுவரை அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக அந்த அப்செட்டை நிகழ்த்திக் காட்டும் சக்தி ஆப்கனுக்கு இருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது. போட்டியை ஆடுகின்ற இருநாட்டின் ரசிகர்களை விடவும் இந்திய ரசிகர்களின் ரத்த அழுத்தத்தையே இந்தப் போட்டி அதிகமாக எகிற செய்யப்போகிறது. என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button